அவருக்கே என்றென்றைக்கும் பயப்படுங்கள்!
B.A. Manakala
சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். சங். 72:5.
நான் மலைகளில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போதெல்லாம்..., ஒரு குறிப்பிட்ட இடத்தில், பெரிய பாறைகளைக் குடைந்து, அதன் நடுவே போடப்பட்ட சாலை ஒன்று வரும். ஆரம்பத்தில்.., அந்த சுரங்கப் பாதையில் வாகனத்தை ஓட்டிச் செல்வது மிகவும் பயமாக இருந்தது... ஏனென்றால், அது மிகவும் நிலையற்ற தன்மையுடன் காட்சியளிக்கும். ஆனால், ஆண்டுகள் பல கடந்த பின்னர்..., நான் அவ்வழியே பல முறை ஓட்டிச் சென்று வந்த போது..., அந்த குகைப் பாதையைப் பற்றியோ, என் தலை மேல் இருக்கும் பாறையைப் பற்றியோ... நான் கண்டுகொள்வதே இல்லை!
நாம் பல வருடங்களுக்கு முன்பாக கர்த்தரை நம் இதயத்திலே ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். ஆனால், காலங்கள் செல்லச்செல்ல..., கர்த்தரைப் பற்றிய நமது பயம் அனலற்ற நிலையில், குளிர்ந்து போயிருக்கக் கூடும். இந்த உலகில்..., சுகவீனங்கள், பெருந்தொற்று, யுத்தம், பாதுகாப்பு, அல்லது தனியுரிமை என பல காரியங்களைக் குறித்து நாம் பயப்படுகிறோம். நாம் தேவனுக்குப் பயப்பட்டால், இவைகளில் ஒன்றுக்கும் நம்மை பயமுறுத்தக் கூடிய ஆற்றல் இருக்காது. நாம் அவருக்குப் பயப்படுகையில்..., அவர் தொடர்ந்து நம் வாழ்க்கையை ஆசீர்வதித்து, அதைப் பாதுகாப்பார் (உபா 6:24). கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும் (நீதி. 10:27). வேறு எதைப் பற்றின பயமும்... நம்மை விரக்திக்கும், அழிவுக்கும் நேராய் மட்டுமே நடத்திச் செல்லும். நாம் என்றென்றைக்கும் தேவன் ஒருவருக்கு மட்டுமே பயப்பட வேண்டும்!
தேவனுக்குரிய என் பயத்தையும் அன்பையும் எது களவாடிக் கொள்கிறது?
நாம் எவ்வளவு அதிகமாக கர்த்தருக்குப் பயப்படுகிறோமோ..., (மிகுந்த மரியாதை) அவ்வளவு குறைவாக மற்ற எதற்கும் பயப்படுவோம் (ஆபத்தை எதிர்நோக்குதல்)!
ஜெபம்: கர்த்தாவே, நான் என்றென்றைக்கும் உமக்கே பயப்படுவேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment