எங்குமுள்ள ஜனங்கள் கூறுகிறார்கள்
B.A. Manakala
உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம். உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. சங். 75:1.
கொரோனா பெருந்தொற்று..., படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்தாலும், உலகம் எங்குமுள்ள ஜனங்கள்..., அது எங்கு தொடங்கியது, எப்படிப் பரவுகிறது, எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், எப்படி குணப்படுத்த வேண்டும்..., என இப்பெருந்தொற்றைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தேவனுடைய ஜனங்கள், அவருடைய கிரியைகளைப் பற்றிக் கூறி அறிவிக்கிறதை நாம் கேட்கிற போது, இன்னும் அதிகக் கருத்தோடு நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. தேவன் அற்புதமானவர். அவருடைய செயல்களும் எப்போதுமே அற்புதமானவை. இவை மட்டுமே..., எங்கும், எப்போதும், எல்லோரிடமும், நீங்கள் தைரியமாகப் பறைசாற்றக் கூடிய விஷயங்கள்.
இயேசு கிணற்றருகே சமாரிய ஸ்திரீயுடன் பேசி முடித்த பின்பு, அவள் ஊருக்குள் திரும்பிச் சென்று, தன் கிராமத்தார் அனைவருக்கும் அதைப் பறைசாற்றினாள். அந்த ஊரார் வந்து, இயேசுவுக்கு செவிகொடுத்து, அவரில் விசுவாசம் வைத்தார்கள் (யோவான் 4). நம்முடைய வாழ்க்கை, நம்மைச் சுற்றியுள்ள ஜனங்களுக்குப் பல்வேறு விஷயங்களைப் பறைசாற்றுகிறது. நம்முடைய வாழ்வின் மூலமாக, நாம் நம்முடைய நண்பர்களுக்கு எதைக் கூறி அறிவிக்கிறோம் என்பதை அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வோமாக.
எல்லாரும் கேட்கக்கூடிய வகையில்..., தேவனுடைய வியத்தகு செயல்களைப் பற்றி நான் கூறி அறிவிக்கிறேனா?
தேவனின் அதிசயமான செயல்களை எப்போதும் கேட்டு, அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் தொடர்ந்து பறைசாற்றுங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய அருமையான கிரியைகளைப் பற்றி நான் இன்னும் அதிகமாகக் கேட்டு, அவற்றைப் பற்றிப் பிறரிடம் பறைசாற்றுவேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment