அன்றன்றுள்ள அப்பம்
Friday, April 09, 2021
B.A. Manakala
நான் இளைஞனாயிருந்தேன். முதிர்வயதுள்ளவனுமானேன். ஆனாலும், நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை. சங். 37:25.
கொரோனா சூழ்நிலையானது.., நம்மில் பலரை, மளிகை சாமான்களையும், தேவையான பிற திண்பண்டங்களையும் சேமித்து வைக்கச் செய்துள்ளது. எதிர்காலத்தில் பஞ்சம் வரப்போகிறதா என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாது. அப்படி வந்தால், நாம் என்னவெல்லாம் சேமித்து வைத்துள்ளோமோ, அவை போதுமானதாக இருக்காது. இருப்பினும்..., நீதிமான் அப்பத்துக்கு இரந்து திரிவதில்லை (சங். 37:25). அன்றன்றுள்ள ஆகாரத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டியது அவசியம் (மத். 6:11).
மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் பிழைத்துவிட முடியாது (மத். 4:4) என்றும், தானே ஜீவ அப்பம் (யோவா. 6:35) என்றும் இயேசு சொன்னார். நம்முடைய சரீரத்தை போஷிப்பதிலேயே நாம் முனைப்புடன் இருக்கிறோம். எந்த அளவிற்கு நம்முடைய உள்ளான மனிதனை நாம் போஷிக்கிறோம்? பூமியில் மிகக் குறுகிய வாழ்க்கை வாழும் நம் சரீரத்திற்கு, சரீர போஜனம் ஊட்டமளிக்கிறது. ஆவிக்குரிய போஜனமோ, நம்மை நித்தியத்துக்கு ஆயத்தப்படுத்துகிறது.
நித்தியத்திற்கு நேராய் தளராமல் நம்மை நடத்திச் செல்லும் ஆகாரத்திற்காக அதிகமாகவும், தற்காலிகமாக நமக்கு ஊட்டமளிக்கும் ஆகாரத்திற்காக கொஞ்சமாகவும் வேண்டுங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, சரீர மற்றும் ஆவிக்குரிய போஜனத்தால் என்னைத் தவறாமல் போஷியும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment